பாண்டவர் வனவாசம் முடித்து வந்ததும், அவர்களுக்குரிய நாடுதரலாம் என்று கூறியிருந்தான் துரியோதனன். நாடு தருவதாகச் சொன்ன துரியோதனன், அவர்கள் திரும்பி வந்தபின் ஒரு ஊரையேனும் கொடுக்க மறுத்தான்! துரியோதனனாதியோர் அதர்ம வழியில் நடப்பதை எல்லோரும் கண்டித்தனர், ஆனாலும் பலன் அளிக்கவில்லை.
கிருஷ்ணரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றார். அதர்ம துரியோதனன் போரையே விரும்பினான்! இறுதியில் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தாத தேர் சாரதியாக பாண்டவர் பக்கமும், அவரது படையை துரியோதனனும் எடுத்துக் கொண்டான். அதர்ம வழியில் செல்பவர்கள் அழிய வேண்டுமே! ஆகவே போர் முடிவாயிற்று.
பஞ்சபாண்டவர்களில் கடைசித்தம்பியான சகாதேவன் சாஸ்திரக் கலையை கரைத்துக் குடித்தவன். ஆகவே, துரியோதனன் இவனிடம் வந்து, போரை எப்பொழுது ஆரம்பித்தால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று கேட்டான். தர்மவழியில் நடக்கும் பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான இவன் "வருகிற அமாவாசையில் துவங்கினால் உனக்கே வெற்றி" என்ற உண்மையைக் கூறினான்! சகாதேவன் துரியோதனனுக்கு நாள் குறித்துக் கொடுத்த விஷயம் கிருஷ்ணருக்கும் எட்டியது.
நாளை அமாவாசை.. ஆகவே, போர் ஆரம்பிப்பதற்கு எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். நாளை அமாவாசை என்று இருந்தபொழுது, அமாவாசைக்குரிய சடங்குகளை இன்றே நடத்துங்கள் என்று பாண்டவர்களுக்குக் கட்டளையிட்டார் கிருஷ்ணர். நாளைதானே அமாவாசை என்று அவர்கள் அசட்டையாக இருந்தார்கள். கிருஷ்ணர் எல்லோரையும் வரவழைத்து, அமாவாசைக்குரிய சடங்கை அவரே ஆரம்பித்து வைத்தார்.
அமாவாசைக்குரிய சடங்குகள் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது! சூரியனும், சந்திரனும் மிக கிட்டவே நின்றிருந்த சமயம் அது. "இவர்கள் நாளை செய்ய வேண்டிய சடங்கை இன்றே செய்கிறார்களே...நாம் போய் நாளைதான் அமாவாசை என்பதை விளக்கிக் கூறுவோம்" என்று தீர்மானித்த சூரியரும் சந்திரரும், இறங்கி சடங்கு நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். "நாளை தானே அமாவாசை, இச்சடங்கை நாளை செய்யுங்கள்" என்று கூறியவாறு, அதை நிறுத்த முயன்றனர்.
அப்பொழுதுதான், மோகனப் புன்முறுவலுடன் நின்ற கிருஷ்ணரை சூரியனும், சந்திரனும் கண்டனர். "சூரிய சந்திரர்களே! கொஞ்சம் பொறுங்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாளன்றோ அமாவாசை! இப்பொழுது இருவரும் சேர்ந்துதானே இங்கே நிற்கிறீர்கள். ஆகவே, இன்று தானே அமாவாசை" என்றார் கிருஷ்ணர்! விஞ்ஞான ரீதியிலும், சூரியனும் சந்திரனும் ஒன்றாக நிற்கும் பொழுதே, பூமிவாசிகளுக்கு அமாவாசை.
ஆகவே சூரியர் சந்திரருக்கு அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று! அதைத் தொடர்ந்து, அமாவாசை சடங்கு தடல்புடலாக நடந்து முடிந்தது. துரியோதனன் மறுநாளே போரை ஆரம்பித்தான், ஆகையினால் அவனால் வெற்றிபெற முடியவில்லை.
Post a Comment
1 comments:
நன்றி
Post a Comment