அன்று வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்க, துவாரகை வாசிகளும், மகான்களும், மகரிஷிகளும், பக்தர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தைக் கண்ட நாரதர் "ஆகா... எல்லோருக்கும் எத்தகைய பக்தி! உபவாசமிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருக்கிறார்களே" என்று பெருமிதப்பட்டார். அங்கிருந்த ருக்மிணிகூட அசந்து போனாள். "இவர்களது பக்திக்கு ஈடேது இணையேது... நம்பமுடியவில்லையே" என்றாள்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர், மனதிற்குள் சிரித்தார். பக்தியின் உண்மைத் தத்துவத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தார். பிறகு தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாக நடித்தார்! மஞ்சத்தில் படுத்து துடிதுடித்தார். பரந்தாமனுக்கே தலைவலியா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
மருத்துவர் "தன்வந்திரி" வந்து மருந்து கொடுத்தார். நாரதர், ருக்மணி எல்லோரும் மனம் கலங்கி நின்றார்கள்! சிறிது நேரத்தின் பின்பும், பரந்தாமன் தலைவலியால் துடிதுடித்தார். வந்தவர்கள் எல்லோரும் கலங்கி நின்றனர். "கிருஷ்ணா! தன்வந்திரிக்கே உன் தலைவலிக்கு மருந்து தெரியவில்லை. நீர் படும் வெதனையை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க மடியவில்லை. இதற்கான மருந்தை நீரே கூறும், எங்கிருந்தாலும் போய் கொண்டுவருகிறோம்" என்று கேட்டார் நாரதர்.
"இதற்கு மருந்து என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. கேட்டால் அவர்கள் தருவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்றார் கிருஷ்ணர். "இதென்ன கிருஷ்ணா! நாம் எல்லோருமே உமது பக்தர்கள்தானே, யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், உடனே தரக்காத்திருக்கிறோம்" என்று நாரதர் உற்சாகமாகப் பதிலளித்தார்.
"அப்படியா நாரதா! எனது பக்தரின் பாத தூசியை எனது சிரசில் தடவினால் இந்த தலைவலி நீங்கிவிடும். உங்களில் யார் தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார் கிருஷ்ணர். இதைக்கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டனர்! பரமபக்தரான நாரதரையே எல்லோரும் பார்த்தார்கள்.
நாரதர் வெகுண்டார். "எல்லோரும் என்னை ஏன் பார்க்கிறீர்கள், நான் பரந்தாமனின் பக்தன்தான், ஆனாலும் எனது பாத தூசியை பகவான் தலையில் போட்டு.., பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கொடிய நரகம்தான் எனக்குக் கிடைக்கும். ஏன் பரந்தாமனின் பத்தினி அதைச் செய்யலாமே.. என்றார்.
"நான் அந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்றாள் ருக்மிணி. "பிரபு! வேறு மருந்தைச் சொல்லுங்களேன்" என்றார் நாரதர். "நாரதா! பிருந்தாவனம் சென்று கோபிகளைக் கேட்டுப்பாரும், யாராவது தரக்கூடும்" என்றார் கிருஷ்ணர்.
நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று, செய்தியை கோபிகளுக்குச் சொன்னார். சில கோபிகள் மயங்கி வீழ்ந்தனர். "அட பாவிகளா! இங்கு இருக்கும் வரை அவருக்கு எந்த வருத்தமும் வந்ததில்லையே. துவாரகையில் அவரைச் சரியாகக் கவனிக்க வில்லையா? என்று கேட்டு நாரதரைப் புடைந்து எடுத்தனர். "தங்கள் பாத தூசியை அவரின் தலையில் போட்டு, கொடிய நரகத்திற்குப் போக அங்கு யாரும் விரும்பவில்லை. ஆகவேதான் இங்கு வந்தேன்" என்று பயத்துடன் கூறினார் நாரதர்.
"எங்களில் உண்மையான பக்தை யார் என்று பார்க்க இப்பொழுது நேரமில்லை. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கூறியவாறு ஒருத்தி துணியை விரிக்க.., மற்றைய கோபியர் அதில் தங்கள் கால் தூசியைச் சேர்த்தனர். அதை ஒரு பொட்டலமாக முடிந்து கொடுத்து, "கதைத்து நேரத்தைப் போக்காமல், உடனடியாகச் சென்று அவரின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்" என்று நாரதரை அனுப்பி வைத்தார்கள் கோபிகள்.
"எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கோபிகள் சொன்னது நாரதரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பயனை எண்ணாது, பகவானை எண்ணுவதே தூய பக்தி என்பதை புரிய வைக்க பகவான் நடத்திய நாடகம் என உணர்ந்தார் நாரதர்!.
கிருஷ்ணரிடம் சென்று அந்த முடிச்சிலிருந்த கோபியரின் பாத தூசியை தனது தலையிலே போட்டுக்கொண்ட நாரதர், தங்களுக்கு எக்கேடு வந்தாலும் பரவாயில்லை, பரந்தாமனுக்கு எக்கேடும் வரக்கூடாது என்று எண்ணும் கோபியரின் பக்தியே மேன்மையானது என்றார்.
Post a Comment
1 comments:
நல்ல கருத்தொன்றை பெற்றுகொண்டேன் தோழி அக்கா ...
Post a Comment