குருவாயூரில் இரண்டு கிருஷ்ண பக்தர்கள் இருந்தார்கள். ஒருவர் "குரூரம்மை" என்ற பெண்மணி, மற்றவர் "பில்வமங்கள்". இவ்விருவருக்கும் கண்ணன் குழந்தை கண்ணனாகவே பேசி, விளையாடி மகிழ்விப்பான்.
கண்ணனைக் காணாமல் குரூரம்மை சாப்பிடாமலே இருப்பாள். பில்வமங்களோ தன்னிடம் இருக்கும் துளசி தீர்த்தத்தையே கண்ணனைச் சாப்பிடச் சொல்வான். இருந்தாலும் இருவருமே பக்தர்கள்தான்.
ஒருநாள் இவ்விருவருக்கும் தெரிந்த ஒருவர் வயிற்றுவலியால் தவித்தார். அவர் பில்வமங்களிடம் சென்று "எனது வயிற்று வலிபற்றி உன் கிருஷ்ணரிடம் கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்று கேட்டான். பில்வமங்கள் கிருஷ்ணரைக் கண்டபொழுது "எனது நண்பன் ஒருவன் வயிற்றுவலியால் ரொம்பவும் கஷ்டப்படுகிறான். இதற்கு ஏதும் செய்ய முடியதா? " என்று கேட்டார். "அதற்கு என்ன செய்வது. அது அவனது பூர்வ ஜென்ம வினை. இப்பொழுது அனுபவிக்கிறான்" என்றார்.
வயிற்றுவலி குணமடையாத காரணத்தால், அவன் குரூரம்மையிடம் போனான். "அம்மா! என்னால் இந்த வயிற்றுவலியைத் தாங்க முடியவில்லை. உன் கிருஷ்ணரிடம் கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்று கேட்டான். கண்ணன் குரூரம்மையிடம் வந்த பொழுது "எனக்குத் தெரிந்த ஒருவன் வயிற்றுவலியால் மிகவும் கஷ்டப்படுகிறான். அவன் வலியை நீ போக்கக்கூடாதா" என்று வேண்டுகோள் விடுத்தாள். "ஆகட்டும். அவன் வலியை போக்குகிறேன்" என்றான் கண்ணன். அவனின் வயிற்றுவலியும் நீங்கியது.
ஓர் நாள் பில்வமங்கள் வயிற்றுவலி நண்பனைச் சந்தித்தபொழுது, அதுபற்றி விசாரித்தார். "அதுவா, குரூரம்மை எனக்காக கண்ணனிடம் சொன்னாள். அது இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது" என்றான். பில்வமங்கள் கோபத்துடன் கண்ணனுக்காக காத்திருந்தார். "அந்த வயிற்றுவலிக்காரனைப் பற்றி நான் சொன்னபொழுது, "அது அவன் பூர்வ ஜென்ம வினை என்றாய், குரூரம்மை சொன்னவுடனேயே வயிற்றுவலியைப் போக்கிவிட்டாயே" என்று கோபத்துடன் கூறினான்.
"ஆமாம்.., குரூரம்மை வயிற்றுவலியைப் போக்கு" என்று தாயுள்ளத்துடன் கேட்டாள். ஆனால் நீயோ, "வயிற்று வலிக்கு எதுவும் செய்யமுடியாதா?" என்றுதானே கேட்டாய்! என்னுடைய அருளும் அனுக்கிரகமும் எப்படிப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அதைப் பொறுத்தே அமைகிறது. இதில் வேண்டியவன், வேண்டாதவன் என்று ஒன்றும் இல்லை என்றார் கண்ணன்.
"பிரபோ! வயிற்றுவலியைப் போக்கும்படி கேட்காதது என் தவறுதான். பிரார்த்திப்பதில்கூட சூட்சுமம் இருப்பதை இப்போது அறிந்து கொண்டேன். என் மனம் தெளிந்தது. என்னை மன்னிப்பாயாக" என்று கைகூப்பி வணங்கி நின்றான் பில்வமங்கள்.
Post a Comment
0 comments:
Post a Comment