Sunday, 30 December 2012

கணேச பஞ்சரத்னம்

கணேச பஞ்சரத்னம்முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

இதி ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் சம்பூர்ணம்.Monday, 24 December 2012

குரு என்னைப் பார்ப்பார்

சீடர் ஒருவர் சிறுவயதிலிருந்தே தன் குருவிற்கு சேவை செய்து வந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அவருக்குக் கண் பார்வை மங்கியது. இருந்தாலும் தொடர்ந்து தன் பணியைச் செய்து வந்தார்.

ஒருநாள் உணவுடன் வரும்பொழுது கால் தவறி விழுந்துவிட்டார். அதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் "ஐயா தங்களுக்குக் கண் தெரியவில்லை. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணியை நாங்கள் செய்கிறோம்" என்றனர்.

சீடர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. "ஐயா என்னால் என் குருவை தரிசிக்க முடிவதில்லை. ஆனால் அவர் என்னைப் பார்ப்பார் இல்லையா? அவருடைய அருட்பார்வை என்மேல் விழும் இல்லையா? அதற்காககத்தான் இங்கு வருகிறேன்" என அவர் கூறியதைக் கேட்டனர். மற்ற சீடர்கள் அவரது குருபக்தியைப் போற்றினர்.Friday, 30 November 2012

இறைவனிடம் சேர்க்கும் மதம் எது?

சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று 'எந்தனையோ மதங்கள் இருக்கின்றன. அவற்றில் என்னை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் மதம் எது என எப்படிக் கண்டறிவது?' எனக் கேட்டான். அவர் அவனை ஆற்றங்கரைக்குக் கூட்டிக் கொண்டு போய் 'அடுத்த கரைக்குப் போக படகு தயார் செய். அங்கு உன் கேள்விக்கு விடை கிடைக்கும்' என்றார்.

அவன் தயார் செய்து காட்டிய ஒவ்வொரு படகுக்கும் ஏதோ ஒரு குறை கூறி ஒதுக்கித் தள்ளினார் குரு. சீடனுக்கோ எப்படியாவது அடுத்த கரைக்குப் போய் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பு! பொறுமை இழந்த அவன் ஏதோ ஒரு படகில் ஏறிக்கொண்டு மறுகரைக்குச் சென்றான். அங்கு அவன் கேள்விக்கு விடை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படவில்லை. குருவிடம் வந்து மீண்டும் கேட்டான்.

அவர் சொன்னார், 'உனக்கு உண்மையை அறிந்து கொள்ள மறுகரைக்குப் போயாக வேண்டும் என்ற உத்வேகத்தான் முக்கியமாக இருந்ததே தவிர மறுகரைக்குக் கொண்டு போகும் படகு முக்கியமாகப் படவில்லை. மேலும், மறுகரைக்குப் போவதுதான் முக்கியமே தவிர படகு முக்கியமல்ல. அதே போல் இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிரந்தான் முக்கியமே தவிர பின்பற்றும் மதம் முக்கியமல்ல. எந்தப் படகும் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும். எந்த மதமும் இறைவனிடம் கொண்டு சேர்க்கும். 

சீடன் உண்மையை உணர்ந்தான்.Tuesday, 27 November 2012

விளக்கு தந்த விளக்கம்


ஒரு செல்வந்தன் குருநாதரிடம் வந்து, 'சுவாமி நான் கடவுளை எங்கே தேட வேண்டும்? கோயிலிலா, ஆசிரமத்திலா, வீட்டு பூஜை அறையிலா?' எனக் கேட்டான்.

அது இரவு நேரம். இருந்தாலும் சற்று தூரம் உலாவி விட்டு வரலாமென அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார் குரு. அப்பொழுது ஒருவன், இருட்டில் வழி தெரிவதற்காக ஒரு லாந்தர் விளக்க எடுத்துக் கொண்டு, அருகிலிருந்த வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டுவதைப் பார்த்தார்கள். வீட்டுக்காரன் கதவைத் திறந்து 'என்ன வேண்டும் உனக்கு? இந்த நேரத்தில் வந்து ஏன் கதவைத் தட்டுகிறாய்?' என கேட்டான்.

'இல்ல எனக்குப் புகை பிடிக்க வேண்டும் போல இருக்கிறது. என்னிடம் சுருட்டு இருக்கிறது. ஆனால் தீப்பெட்டி இல்லை. உன்னிடம் இருக்குமா என  கேட்க வந்தேண்' என பதிலளித்தான்.

உடனே அந்த வீட்டுக்காரன் சிரித்துக் கொண்டு 'நீ கொண்டு வந்திருக்கும் லாந்தர் விளக்கிலேயே நெருப்பு இருக்கிறதே. உன்னிடம் நெருப்பை வைத்துக் கொண்டு ஊரெங்கும் தேடி அலைகிறாயே' என கேலி செய்தான்.

அங்கு நடந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வந்தனிடம் குரு கூறினார். 'நீ கேட்ட கேள்விக்கும் பதில் இதுதான். இறைவனோ நம்முள் என்றும் அந்தர்யாமியாய், அழியாப் பொருளாய் விளங்குகிறான். உள்ளே இருப்பவனை ஊரெங்கும் தேடி ஏன் அலைகிறாய்? உனக்குள் மூழ்க நீ கற்றுக் கொண்டால் கோயிலிலோ, ஆசிரமத்திலோ, பூஜை அறையிலோ இறைவனைத் தேடி அலையத் தேவையில்லை.

சாதாரண ஒரு நிகழ்ச்சி கூட உயர்ந்த தத்துவத்தை விளக்கும் என செல்வந்தன் புரிந்து கொண்டான்.Monday, 26 November 2012

பூவும் புன்னகையும்..!


ஒரு நாள் புத்தபிரான் தம் கையில் ஒரு மலரை ஏந்தியவாறு வந்து கொண்டு இருந்தார். அதை கண்ட சீடர்கள் மலரைபற்றி  ஏதாவது தாங்கள் கூற வேண்டும் என குருநாதர் எதிர்பார்கிறார் என்று நினைத்தனர். எனவே ஒரு சீடர் மலரைப்பற்றி ஒரு  பிரசங்கம்  செய்தார். இன்னொருவர் கவிதை பாடினார். மற்றவர் கதை சொன்னார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் கற்பனா சக்தியை வெளியிட்டனர்.
       
ஆனால், மகாகாஷ்யபர் என்ற சீடர் மட்டும் பூவை பார்த்து விட்டு ஒரு புன்னகையுடன் மெளனமாக இருந்தார். 

புத்தர் கூறினார் "இறைவனையும் இயற்கையையும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அவை அனுபவித்து உணர வேண்டியவை."
Tuesday, 13 November 2012

சொர்க்கம் செல்ல வழி..!ஒரு பணக்காரன் வந்து குருவிடம் கேட்டான். 'ஸ்வாமி' சொர்க்கத்திற்குச் செல்ல ஒரு வழி கூறுங்கள்!' குரு சொன்னார் 'தினமும் தர்மம் செய்து வா.' ஒரு வாரம் கழித்து அவன் வந்து தான் தினமும் ஒரு கைபிடி அரிசி தர்மம் செய்து வருவதாகவும், தான் சொர்க்கத்திற்குச் செல்வது உறுதி தானே எனவும் கேட்டான். அதற்கு அவர் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தோட்டத்திற்குச் சென்று மரத்தின் அடிபாகத்தை தன் நகத்தால் கீற ஆரம்பித்தார்.

அவர் என்ன செய்கிறார், எதாற்காக செய்கிறார் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் கடைசியில் பொறுமை இழந்து அவரிடமே கேட்டு விட்டான். அவர் சொன்னார், 'இப்படி நகத்தால் கீறியே இந்த மரத்தை சாய்க்க போகிறேன்'. அவருடைய செய்கை பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தாலும் பணிவோடு 'ஸ்வாமி, இது நடக்கக் கூடிய காரியமா!?' எனக் கேட்டான்.

'ஒரு கைப்பிடி அரிசியை தர்மம் செய்து மோட்சத்தைப் பெற முடியுமானால், கையால் கீறி இந்த மரத்தைச் சாய்க்க முடியாதா?' அப்பொழுது தான் அவனுக்கு தன் தவறு புரிந்தது. தன் சொத்து முழுவதையுமே ஊர் மக்களுக்குக் கொடுத்து விட்டு அவருடைய சீடனாக ஆசிரமத்திலேயே தங்கி விட்டான்.


செங்கல்லைப் போடலாமா?ஒரு குருவிடம் அவருடைய சீடன் சென்று கேட்டான்.

'ஐயா, நான் திராட்சை சாப்பிடலாமா? அது தவறில்லையே?'

'தவறில்லை' என்றார் குரு.

'தண்ணீர் குடிக்கலாமா?

 'குடிக்கலாம்'

'ஏதாவது புளிப்பான பொருள்...?'

'சாப்பிடலாம்...'

உடனே சீடன் சந்தோஷமாகக் கேட்டான் 'அப்படியானால் இந்த மூன்றும் சேர்ந்து தயாரான திராட்சை மதுவையும் சாப்பிடலாம் இல்லியா?'

சீடன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்து கொண்ட குரு அவனுக்குப் புத்தி புகட்ட எண்ணி, அவனிடம் கேட்க ஆரம்பித்தார்.

'நான் உன் தலையில் சிறிது மண்ணைப் போடலாமா?'

'தாராளமாக செய்யுங்கள் குருவே!'

'சிறிது நீர் தெளித்தால்...?'

'செய்யுங்கள் ஸ்வாமி'

'அந்த மண்ணையும் நீரையும் ஒன்றாக சேர்த்து தீயில் காட்டி உருவாக்கப்பட்ட செங்கல்லை உன் தலையில் போடலாமில்லையா?'

பதில் ஏதும் கூறாமல் சீடன் மெளனமானான்.