Tuesday, 27 November 2012

விளக்கு தந்த விளக்கம்


ஒரு செல்வந்தன் குருநாதரிடம் வந்து, 'சுவாமி நான் கடவுளை எங்கே தேட வேண்டும்? கோயிலிலா, ஆசிரமத்திலா, வீட்டு பூஜை அறையிலா?' எனக் கேட்டான்.

அது இரவு நேரம். இருந்தாலும் சற்று தூரம் உலாவி விட்டு வரலாமென அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார் குரு. அப்பொழுது ஒருவன், இருட்டில் வழி தெரிவதற்காக ஒரு லாந்தர் விளக்க எடுத்துக் கொண்டு, அருகிலிருந்த வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டுவதைப் பார்த்தார்கள். வீட்டுக்காரன் கதவைத் திறந்து 'என்ன வேண்டும் உனக்கு? இந்த நேரத்தில் வந்து ஏன் கதவைத் தட்டுகிறாய்?' என கேட்டான்.

'இல்ல எனக்குப் புகை பிடிக்க வேண்டும் போல இருக்கிறது. என்னிடம் சுருட்டு இருக்கிறது. ஆனால் தீப்பெட்டி இல்லை. உன்னிடம் இருக்குமா என  கேட்க வந்தேண்' என பதிலளித்தான்.

உடனே அந்த வீட்டுக்காரன் சிரித்துக் கொண்டு 'நீ கொண்டு வந்திருக்கும் லாந்தர் விளக்கிலேயே நெருப்பு இருக்கிறதே. உன்னிடம் நெருப்பை வைத்துக் கொண்டு ஊரெங்கும் தேடி அலைகிறாயே' என கேலி செய்தான்.

அங்கு நடந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வந்தனிடம் குரு கூறினார். 'நீ கேட்ட கேள்விக்கும் பதில் இதுதான். இறைவனோ நம்முள் என்றும் அந்தர்யாமியாய், அழியாப் பொருளாய் விளங்குகிறான். உள்ளே இருப்பவனை ஊரெங்கும் தேடி ஏன் அலைகிறாய்? உனக்குள் மூழ்க நீ கற்றுக் கொண்டால் கோயிலிலோ, ஆசிரமத்திலோ, பூஜை அறையிலோ இறைவனைத் தேடி அலையத் தேவையில்லை.

சாதாரண ஒரு நிகழ்ச்சி கூட உயர்ந்த தத்துவத்தை விளக்கும் என செல்வந்தன் புரிந்து கொண்டான்.




Post a Comment

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நல்ல கதை...

Post a Comment