Friday, 25 June 2010

குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா?

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும்,

பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார், " இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது, இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம்" என்றார்.

உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.


Wednesday, 23 June 2010

துளசி தீர்த்தம்...




இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது.

மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.

துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும். கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.

ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமனாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

துளசியின் தாவர வியற் பெயர் Ocimum sanctum இது Labiatae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.



Friday, 18 June 2010

கற்பூர தீபாராதனையின் உட் பொருள் என்ன?

மூலஸ்தானத்தின் கருவறையில் வெளி உலகத்திலுள்ள காற்று, ஒளி இலகுவாக உட்புக முடியாத படி அமைக்கப் பட்டிருக்கும். அங்கு ஒரு இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.

நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடை பெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம். இதே போல்,

எண்ணங்கள், சிந்தனைகள் என்று சதா அலை பாயும் எங்கள் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான். அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும் அந்த இருள் அகன்றால் எங்கள் உள் மனதிலுள்ள இறைவணக் காணலாம் என்பதையே கற்பூர தீப ஆராதனை உணர்த்துகிறது.

கற்பூரம் தன்னை முழுமையாக அழித்துக் கொண்டு, பூரணமாய் கரைந்து காணாமல் போகிறது. அது போல இறை இன்ப ஒளியில், அதாவது பூரண சோதியாகிய இறைவனுடன் நாமும் ஐக்கியம் ஆகிவிடவே பிரப்பெடுத்துள்ளோம் என்னும் தத்துவத்தையும் கற்பூர தீபம் எங்களுக்கு உணர்த்துகிறது.

இறைவனுக்கு எல்லாத்தையும் அர்ப்பணித்து மன நிறைவடையாமல் தன்னையே அர்ப்பநிப்பதையே அதாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வதையே கற்பூர தீபாராதனையும், அதை கண்ணில் ஒற்றிக் கொண்டு இறைவனின் பாதார விந்தங்களில் நாம் வீழ்ந்து வணங்குவது உணர்த்துகிறது.

இதையே,

" தீதனையா கற்பூர தீபமென நான் கண்ட
ஜோதியும் ஒன்றித் துரிசறுப்ப - தெந் நாளோ"

என் கிறார் தாயுமானவர்.