Monday, 26 November 2012

பூவும் புன்னகையும்..!


ஒரு நாள் புத்தபிரான் தம் கையில் ஒரு மலரை ஏந்தியவாறு வந்து கொண்டு இருந்தார். அதை கண்ட சீடர்கள் மலரைபற்றி  ஏதாவது தாங்கள் கூற வேண்டும் என குருநாதர் எதிர்பார்கிறார் என்று நினைத்தனர். எனவே ஒரு சீடர் மலரைப்பற்றி ஒரு  பிரசங்கம்  செய்தார். இன்னொருவர் கவிதை பாடினார். மற்றவர் கதை சொன்னார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் கற்பனா சக்தியை வெளியிட்டனர்.
       
ஆனால், மகாகாஷ்யபர் என்ற சீடர் மட்டும் பூவை பார்த்து விட்டு ஒரு புன்னகையுடன் மெளனமாக இருந்தார். 

புத்தர் கூறினார் "இறைவனையும் இயற்கையையும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அவை அனுபவித்து உணர வேண்டியவை."




Tuesday, 13 November 2012

சொர்க்கம் செல்ல வழி..!



ஒரு பணக்காரன் வந்து குருவிடம் கேட்டான். 'ஸ்வாமி' சொர்க்கத்திற்குச் செல்ல ஒரு வழி கூறுங்கள்!' குரு சொன்னார் 'தினமும் தர்மம் செய்து வா.' ஒரு வாரம் கழித்து அவன் வந்து தான் தினமும் ஒரு கைபிடி அரிசி தர்மம் செய்து வருவதாகவும், தான் சொர்க்கத்திற்குச் செல்வது உறுதி தானே எனவும் கேட்டான். அதற்கு அவர் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தோட்டத்திற்குச் சென்று மரத்தின் அடிபாகத்தை தன் நகத்தால் கீற ஆரம்பித்தார்.

அவர் என்ன செய்கிறார், எதாற்காக செய்கிறார் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் கடைசியில் பொறுமை இழந்து அவரிடமே கேட்டு விட்டான். அவர் சொன்னார், 'இப்படி நகத்தால் கீறியே இந்த மரத்தை சாய்க்க போகிறேன்'. அவருடைய செய்கை பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தாலும் பணிவோடு 'ஸ்வாமி, இது நடக்கக் கூடிய காரியமா!?' எனக் கேட்டான்.

'ஒரு கைப்பிடி அரிசியை தர்மம் செய்து மோட்சத்தைப் பெற முடியுமானால், கையால் கீறி இந்த மரத்தைச் சாய்க்க முடியாதா?' அப்பொழுது தான் அவனுக்கு தன் தவறு புரிந்தது. தன் சொத்து முழுவதையுமே ஊர் மக்களுக்குக் கொடுத்து விட்டு அவருடைய சீடனாக ஆசிரமத்திலேயே தங்கி விட்டான்.


செங்கல்லைப் போடலாமா?



ஒரு குருவிடம் அவருடைய சீடன் சென்று கேட்டான்.

'ஐயா, நான் திராட்சை சாப்பிடலாமா? அது தவறில்லையே?'

'தவறில்லை' என்றார் குரு.

'தண்ணீர் குடிக்கலாமா?

 'குடிக்கலாம்'

'ஏதாவது புளிப்பான பொருள்...?'

'சாப்பிடலாம்...'

உடனே சீடன் சந்தோஷமாகக் கேட்டான் 'அப்படியானால் இந்த மூன்றும் சேர்ந்து தயாரான திராட்சை மதுவையும் சாப்பிடலாம் இல்லியா?'

சீடன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்து கொண்ட குரு அவனுக்குப் புத்தி புகட்ட எண்ணி, அவனிடம் கேட்க ஆரம்பித்தார்.

'நான் உன் தலையில் சிறிது மண்ணைப் போடலாமா?'

'தாராளமாக செய்யுங்கள் குருவே!'

'சிறிது நீர் தெளித்தால்...?'

'செய்யுங்கள் ஸ்வாமி'

'அந்த மண்ணையும் நீரையும் ஒன்றாக சேர்த்து தீயில் காட்டி உருவாக்கப்பட்ட செங்கல்லை உன் தலையில் போடலாமில்லையா?'

பதில் ஏதும் கூறாமல் சீடன் மெளனமானான்.