Saturday, 17 September 2011

3. பழநிக் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


திருவா வினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தைவே லாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழைபங் காளா
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்

வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா
கயிலாய மேவும் கனகசிம் மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா
திருவரு ணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா

ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா
குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து
உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்
அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்
தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்

சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்
ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம
கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம
சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம
உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம

எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாகச் சண்முகத் துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி
உல்லா சத்துறும் ஓங்கார வடிவே
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்
சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை
கைலாச மேருவா காசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி

மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
கங்கை யீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை

தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
சாகா வகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்

சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறு முகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக் குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி

மனத்தில் பிரியா வங்கண மாக
நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து
நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்(து) ஆறு முகமும்
மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
தனதென வந்து தயவுடன் இரங்கிச்

சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்
தட்டாத வாக்கு சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
சமுசார சாரமும் தானேநிசமென

வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக் குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
சகலகலை ஞானமும் தானெனக் கருளி
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
கிட்டவே வந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்

துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப் பருகி
மழுவிட் டேவி வடவாக் கினிபோல்

தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
திருவை குண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்

ஏக ரூபமாய் என்முனே நின்று
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே சபித்து
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் எதுவேண் டினும்

தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சம்காரா!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!





2. திருப்பரங்குன்றக் கவசம்.




காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


திருப்பரங் குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையா புரியில் மகிழ்ந்துவாழ் பவனே
ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
முழுவுடை முதல்வன் முதலாய் நமோ நமோ

விராலி மலையுறை விமலா நமோ நமோ
நாமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ
சூரசம் கார துரையே நமோ நமோ
வீரவே லேந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடை பரமா நமோ நமோ
கண்களீ ராறுடைக் கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடை கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
வவவ வவவ ஆம் ஹோம்

பபப பபப சாம் சூம்
வவவ வவவ களம் ஓம்
லலி லிலி லுலு நாட்டிய அட்சம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருகநிஷ் களங்கனே வருக
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்

சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனத்துடன் ஞான குருஉனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தவனை

தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கையிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர் காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு
சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழை
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்

நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி
வாணியுடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முக மாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்

பூரணகிருபை புரிபவா போற்றி
பூதலத் துள்ள புண்ணியதீர்த் தங்கள்
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடைஉன்னை
அல்லும் பகலும் ஆசா ரத்துடன்
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி

பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே
செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
அரண்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.


1. திருச்செந்தூர்க் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மைய நடஞ்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென

வசர ஹணபக வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் நிந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று

உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மார்பை யிரத்ந வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காரக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க

முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியேனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொலவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோடப்
படியினின் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில்செதி லாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழுலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாக

உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழிப் பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா விருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியி லணியப்
பாச வினைகள் பற்றதுநீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அட்டதிக் குள்ளோ ரடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாங் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றென துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.