Saturday 17 September 2011

3. பழநிக் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


திருவா வினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தைவே லாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழைபங் காளா
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்

வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா
கயிலாய மேவும் கனகசிம் மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா
திருவரு ணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா

ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா
குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து
உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்
அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்
தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்

சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்
ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம
கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம
சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம
உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம

எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாகச் சண்முகத் துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி
உல்லா சத்துறும் ஓங்கார வடிவே
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்
சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை
கைலாச மேருவா காசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி

மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
கங்கை யீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை

தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
சாகா வகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்

சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறு முகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக் குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி

மனத்தில் பிரியா வங்கண மாக
நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து
நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்(து) ஆறு முகமும்
மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
தனதென வந்து தயவுடன் இரங்கிச்

சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்
தட்டாத வாக்கு சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
சமுசார சாரமும் தானேநிசமென

வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக் குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
சகலகலை ஞானமும் தானெனக் கருளி
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
கிட்டவே வந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்

துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப் பருகி
மழுவிட் டேவி வடவாக் கினிபோல்

தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
திருவை குண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்

ஏக ரூபமாய் என்முனே நின்று
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே சபித்து
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் எதுவேண் டினும்

தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சம்காரா!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!






Post a Comment

1 comments:

Bhogar said...

pazhaniyampathi gnyana thandayudhapani padham potri potri potri

guru bhogar padha kamala saranaaya namasthu

Post a Comment