சதா "நாராயணா நாராயணா" என்று உச்சரித்துக்கொண்டு திரியும் திரிலோக சஞ்சாரியான நாரதருக்கே.. அதன் மகிமையை அறிய வேண்டும் என்னும் ஆவல் வந்தது. நாராயணனான மஹாவிஷ்ணுவைத் தரிசிக்கச் சென்றபொழுது.. "உங்கள் திருநாமத்தின் மகிமைதான் என்ன? இதை உலகறியச் சொல்ல வேண்டாமா" என்று கேட்டார் நாரதர்.
"அப்படியா! பூலோகத்தில் ஏதாவதொரு துல்லிய ஜீவனிடம் என் நாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. பூலோகம் இறங்கி வந்தார் நாரதர். சேற்றில் நெளிந்து கொண்டிருந்த பழுவைக் கண்டார். அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்று இருமுறை சொல்ல.. புழு துடிதுடித்து மரணம் அடைந்தது. நாரதர் அதைக் கண்டு திகைத்தார்.! அடுத்த முறை பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நடந்தவற்றைக் கூறினார்.
"அப்படியா.. பூலோகத்திற்குச் செல். அங்கு ஒரு பட்டாம்பூச்சி மலர் மீது அமர்வதைக் காண்பாய். அதனிடமும் என் திருநாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. நாரதரும் அப்படிப் பூவில் அமரும் பட்டாம்பூச்சியைக் கண்டு.. அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்றார். சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி.. திடீரென்று இறந்த வீழ்ந்தது. திரும்ப பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நாரதர் நடந்ததைக் கூறினார். "ஓ பட்டாம்பூச்சியும் மாய்ந்ததோ! சஞ்சலம் வேண்டாம் நாரதா. குட்டி மான் பால்குடித்துக் கொண்டிருப்பதைக் காண்பாய். அதன் செவியில் என் நாமத்தை ஒதுவாயாக" என்று கூறி அனுப்பி வைத்தார்.
நாரதரும் அப்படியொரு மான் குட்டி பால் குடிப்பதைக் கண்டபோது அதன் அருகில் சென்று.. தயக்கத்துடன் "நாராயணா நாராயணா" என்றார். அடுத்த கணம் அந்தக் குட்டிமான்.. துள்ளி எழுந்த வேகத்திலேயே வீழ்ந்து மடிந்தது. நாரதர் திடுக்கிட்டார். திரும்பவும் பகவானைத் தரிசிக்கப் போன பொழுது "பகவானே! புழு இறந்தது.. பட்டாம்பூச்சியும் மாய்ந்தது.. மான்குட்டியும் மடிந்தது. இதென்ன அபச்சாரம் மாதவா! என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
"அதற்குள் மனம் தளர்ந்தால் எப்படி? ஒரு பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் காண்பாய். அதனிடம் சென்று என் நாமத்தை உச்சரிப்பாயாக" எனக் கூறி அனுப்பி வைத்தார். பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் கண்ட நாரதர்.. இந்தப் பசுக்கன்றும் இறந்துவிடுமோ என்று பயந்தார். அதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணியவாறு பசுக்கன்றின் காதில் "நாராயணா நாராயணா" என்றார். பசுக்கன்றும் தொப்பென வீழ்ந்து இறந்தது. இதை எப்படிச் சொல்வது என்று தயங்கினார் நாரதர். பிறகு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாராயணனிடம் சென்றார்.
"பகவானே! காக்கும் கர்த்தாவாகிய உங்கள் திருநாமம் இப்படிச் சம்ஹாரத்தில் முடிவது என்ன சோதனை சுவாமி" என்று கேட்டார். "பிரம்மபுத்திரா.. அதற்குள் அவசரப்படுகிறாயே! காசிராஜன் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அங்கு கோலாகல கொண்டாட்டம் நடைபெறுகிறது. நீ அந்த சிசவிடம் சென்று.." என்று சொல்லி முடிக்க முன் நாரதர் குறுக்கிட்டார். "சுவாமி.. என்னை கலகப் பிரியன் என்று தான் சொல்வார்கள். என்னை கொலைகாரன் பட்டத்துடன் உலவவிட திருவுளமோ" என்றவாறு தன் அதிருப்தியைத் தெரிவித்தார். "நாரதா! இந்த ஒரு தடவை மட்டும் அந்தக் குழந்தையின் செவியில் எமது நாமத்தை சொல்லி வருவாயாக" என்று கேட்டுக் கொண்டார்.
காசிராஜன் அரண்மனையில் நடந்த பிறந்ததின விழாவிற்கு நாரதர் சென்றார். "சுவாமி.. என் குமாரன் பிறந்த நாளில் தாங்கள் எழுந்தருளியது எங்கள் தவப்பயன். என் மைந்தன் பெயரும் புகழும் பெற்று சிறந்து விளங்க ஆசி கூறுங்கள்" என்று கூறியவாறே நாரதரை வரவேற்றார் காசிமன்னன். தயக்கத்துடன் குழந்தையின் காதில் "நாராயணா நாராயணா" என்று ஓதினார் நாரதர். என்ன ஆச்சரியம்.. குழந்தை பேச ஆரம்பித்ததைக் கேட்டு திகைப்படைந்தார். "மகரிஷி.., தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். நாராயண நாமத்தின் மகிமை இன்னுமா புரியவில்லை? என்று கேட்டது குழந்தை. " குழந்தாய் விபரமாகச் சொல்" என்றார் நாரதர்.
"ஆரம்பத்தில் புழுவாய் இருந்தேன். அப்பொழுது உங்கள் நாராயண மந்திரம்என்னைப் பட்டாம்பூச்சி ஆக்கியது. அதேபோல்.. மானாகி, பசுவாகி இப்பொழுது கிடைத்தற்கரிய மானிட பிறவி அடைந்ததும் அதே நாராயண மந்திர மகிமையால் தான்" என்று கூறியது குழ்ந்தை. நாராயண மந்திரத்தின் மகிமையைப் பரிந்து கொண்ட நாரதர்.. குழந்தையை வாழ்த்திவிட்டு தன் இருப்பிடம் சென்றார்.
Post a Comment
3 comments:
நாராயணா! நாராயணா!. மிக அருமையான கதை. ஆழ்ந்த கருத்துக்கள்.
arumaiyaka ullathu..
Om Namo Narayanaya
Post a Comment