Sunday 19 June 2011

பகவானைச் சரணடைந்த தவளைக் குஞ்சு...

வனவாசம் நடத்திவந்த பாண்டவர்களைப் பார்த்துவர, ஒருநாள் கிருஷ்ணர் அங்கு சென்றார்.

கிருஷ்ணரைக் கண்ட குந்திதேவி "காட்டிலே எத்தனை நாள்தான் அவதிப்பட முடியும்" என்று சலிப்புடன் கேட்டாள். "அத்தை, எல்லாவற்றிற்கும் ஒருமுடிவு காலம் உண்டு. விரைவில் நல்ல காலம் வரும். கவலைப்படாதே" என்று ஆறுதல் கூறினார் கிருஷ்ணர்.

கிருஷ்ணரைக் கண்ட பாஞ்சாலி ஓடிவந்து "அண்ணா! நல்ல காலம் வருகிறபோது வரட்டும், முதலில் வந்த களைப்புத் தீர நீராடுங்கள். சட்டென வெந்நீர் சுடவைக்கிறேன்" என்று கூறியவாறு அடுப்பங்கரைக்குப் போக, வீமன் காய்ந்த சுள்ளிகளைக் கொடுத்து, அண்டாவிலும் நீர் கொண்டுவந்து கொடுத்தான். அடுப்பு நன்றாக எரிந்து கொண்டு இருந்தது. நீர் கொதிக்கும்வரை, எல்லோரும் உரையாடிக் கொண்டு இருந்தனர்!

"அருச்சுனா! வனவாசம் எப்படி இருக்கு" என்று கேட்டார் கிருஷ்ணர். "நீங்கள் எங்கள் இதயத்தில் இருக்கும் வரை, எங்களுக்கு ஏது கவலை. நகரத்தில் இருந்ததைவிட, மகிழ்ச்சியாகவே பொழுது போகிறது" என்றான். கிருஷ்ணர் தருமரைப் பார்த்து "தர்மா! தம்பி சொல்வதைக் கேட்டாயா, நாட்டைவிட காடே சுகம் என்கிறானே!" "அதில் என்ன தப்பு, இயற்கை அழகிற்கு ஈடு இணை ஏது" என்றார் தருமர். பிறகு "பாஞ்சாலி! நீ என்ன நினைக்கிறாய்" என்று கேட்க, "காடோ நாடோ, எனக்கு இவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம்" என்றாள். "அப்படியானால் நல்லது.., நீர் சுட்டுவிட்டதா பார்" என்றார் கிருஷ்ணர்.

இப்பொழுது நன்கு சுட்டிருக்கும் என்று கூறியபடி, பார்க்கச் சென்றாள். "அடுப்பு இவ்வளவு நன்றாக எரிகிறதே, இன்னும் நீர் குளிராகவே இருக்கிறது" என்று குரல் கொடுத்தாள். பீமனும் அங்கு சென்று பார்த்துவிட்டு "இது என்ன அதிசயம்! இவ்வளவு நேரமாகியும், நீர் குளிராகவே இருக்கிறதே" என்று கூறியவாறு அவர்கள் பேசிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தான்.

"அப்படியா! வாருங்கள் பார்க்கலாம்" என்றவாறு எல்லோரையும் அழைத்து வந்தார் கிருஷ்ணர். அண்டாவில் கையை விட்டுப் பார்த்துவிட்டு "ஆமாம்! தண்ணீர் சில்லென்று குளிர்கிறதே, இதை ஊற்றிவிட்டு வேறு நீர் வையுங்கள்" என்றார் கிருஷ்ணர்.

பீமன் அண்டாவைச் சரிக்க, அதிலிருந்து தவளைக் குஞ்சு தத்திக் கொண்டு வெளியேறியது! அங்கு நின்ற குந்திதேவி "இதென்ன ஆச்சரியமாய் இருக்கிறதே" என்றாள். அருகில் நின்ற தருமர் "இதில் என்ன ஆச்சரியப்படுவதற்கு இருக்கிறது! தவளை அண்டாவினுள் இருந்தபடியே பகவானைத் தஞ்சம் அடைந்திருக்கும், தஞ்சம் புகுந்தவரைக் காப்பது பகவானின் கடமையாச்சே" என்றார். "ஆமாம் தர்மா, அது அற்ப ஜீவனாக இருந்தாலும், சரணடைபவர்களை காப்பாற்றுவது கடமையாச்சே" என்றார் கிருஷ்ணர்.

ஒரே குரலில் எல்லோரும் "கண்ணா மணிவண்ணா, நாங்களும் சரணடைகிறோம" என்றார்கள். பலபேர் அழிந்த பாரதப்போரில், இவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்!

இருந்த இடத்தில் இருந்தவாறே முழு மனதுடன் பகவானை வேண்டிக்கொண்ட தவளைக்குஞ்சு, வியக்கத்தக்க விதத்தில் உயிர் தப்பியது! பக்தி உண்மையானால் பலன் கிடைக்கும்.




Post a Comment

2 comments:

jagadeesh said...

Good story :)

Unknown said...

நல்ல கதை ... நல்ல கருத்து ...

Post a Comment