Friday 25 June 2010

குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா?

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும்,

பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார், " இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது, இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம்" என்றார்.

உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.


Wednesday 23 June 2010

துளசி தீர்த்தம்...




இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது.

மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.

துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும். கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.

ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமனாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

துளசியின் தாவர வியற் பெயர் Ocimum sanctum இது Labiatae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.



Friday 18 June 2010

கற்பூர தீபாராதனையின் உட் பொருள் என்ன?

மூலஸ்தானத்தின் கருவறையில் வெளி உலகத்திலுள்ள காற்று, ஒளி இலகுவாக உட்புக முடியாத படி அமைக்கப் பட்டிருக்கும். அங்கு ஒரு இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.

நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடை பெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம். இதே போல்,

எண்ணங்கள், சிந்தனைகள் என்று சதா அலை பாயும் எங்கள் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான். அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும் அந்த இருள் அகன்றால் எங்கள் உள் மனதிலுள்ள இறைவணக் காணலாம் என்பதையே கற்பூர தீப ஆராதனை உணர்த்துகிறது.

கற்பூரம் தன்னை முழுமையாக அழித்துக் கொண்டு, பூரணமாய் கரைந்து காணாமல் போகிறது. அது போல இறை இன்ப ஒளியில், அதாவது பூரண சோதியாகிய இறைவனுடன் நாமும் ஐக்கியம் ஆகிவிடவே பிரப்பெடுத்துள்ளோம் என்னும் தத்துவத்தையும் கற்பூர தீபம் எங்களுக்கு உணர்த்துகிறது.

இறைவனுக்கு எல்லாத்தையும் அர்ப்பணித்து மன நிறைவடையாமல் தன்னையே அர்ப்பநிப்பதையே அதாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வதையே கற்பூர தீபாராதனையும், அதை கண்ணில் ஒற்றிக் கொண்டு இறைவனின் பாதார விந்தங்களில் நாம் வீழ்ந்து வணங்குவது உணர்த்துகிறது.

இதையே,

" தீதனையா கற்பூர தீபமென நான் கண்ட
ஜோதியும் ஒன்றித் துரிசறுப்ப - தெந் நாளோ"

என் கிறார் தாயுமானவர்.


ராம நாம மகிமை...

போர் முடிந்து அயோத்தி திரும்பிய ராமன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பின்னர் அசுவமேத யாகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது!. இராமனின் அரசவையை வசிட்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் அலங்கரித்திருந்தனர். அந்த சமயத்தில் அரசன் ஒருவன் அரசவை வந்து ராமரை வணங்கிச் சென்றான். அங்கிருந்த நாரதர் கலகம் மூட்டும் நோக்கத்துடன் விசுவாமித்திரரிடம் அந்த அரசன் உங்களை வணங்காமல் அவமதித்து விட்டான் என விசுவாமித்திரரை கோபம் கொள்ள செய்தார்.

வெகுண்டெழுந்த விசுவாமித்திரர், இராமரிடம் இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக அந்த அரசனின் தலையை என் காலில் கொண்டு வந்து போடவேண்டுமென ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற் கொண்ட ராமனும் போருக்கு கிளம்பி விட்டான். இதற்கிடையில் நாரதர் அந்த அரசனையும் சந்தித்து விசுவாமித்திரரின் கோபத்தையும் அதன் விளைவையும் கூறிவிட, அந்த அரசன் பயந்து நாரதரின் காலில் விழுந்து காப்பாற்ற வேண்டினான்.

இராம பாணத்திற்கு முன்னால் ஏதும் செய்ய இயலாதென கூறிய நாரதர், இந்த உலகில் உன்னை காப்பாற்றும் வல்லமை ஒரே பெண்ணுக்குத்தான் இருக்கிறது. அவள் பாதங்களை சரணடைந்து விடு, அவள் உணக்கு அபயமளித்தேன் என சொல்லும் வரை அவள் பாதத்தில் வீழ்ந்து கிட என்று கூறினார்.

அவள் அனுமனின் தாயாரான அஞ்சன தேவி...

அஞ்சன தேவியில் காலில் வீழ்ந்து கதறியழுத மன்னனை காப்பாற்றுவதாக கூறிய அஞ்சன தேவி, தனது மகன் அனுமனை அழைத்து இவனை காப்பாற்று என கூறினாள். தாயின் கட்டளையை மீற இயலாத அனுமன் தன் வாலை சுருட்டி மலை போல அமைத்து அதன் நடுவில் அந்த அரசனை உட்கார வைத்து விட்டு, மேலே அமர்ந்த் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார்.

போருக்கு வந்த ராமன், அனுமனிடம் அரசனை வெளியே அனுப்புமாறு கூற, அனுமன் தாயின் கட்டளையைக் கூறி தனது இயலாமையை கூறினார். கோபமுற்ற ராமன் உன் மீது பாணம் தொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்ததையும் அனுமன் ஏற்காமல் ராமநாம ஜெபத்தில் ஈடுபட்டார்.

ராமனும் ஆவேசமாக அம்புகளைத் தொடுக்க அவை அனுமனை தாக்காது அவர் காலடியில் விழத் துவங்கின....தொடரும் ராமனின் அம்பு மழையின் உக்கிரத்தால் உலகமெல்லாம் நடுங்கத் துவங்கியது. தேவர்கள் சிவபெருமானை அணுகி இந்த யுத்தத்தினை நிறுத்திட வேண்டினர். அவரோ இதை முடிக்க விசுவாமித்திரனால் மட்டுமே முடியும் என கூறிவிட்டார்.

தேவர்கள் விசுவாமித்திரரை சரணடைய, அவர் மனமிறங்கி போர்களம் வந்தார், அவருடன் நாரதரும் வந்தார். விசுவாமித்திரரின் வார்த்தையை ஏற்று ராமரும் போரை நிறுத்தினார். நாரதல் அனுமனின் வாலுக்குள் மறைந்திருந்த அரசனை அழைத்து விசுவாமித்திரரில் காலில் விழச்செய்தார். அப்போது விசுவாமித்திரரிடம் இவன் தலை இப்போது உங்கள் காலடியில் விழுந்துவிட்டது. இவனை மன்னித்து விடுங்கள் என கோரிக்கை வைக்க, விசுவாமித்திரும் மனமிறங்கி மன்னித்தார்.

அப்போது அங்கு வந்த ராமன், நாரதரிடம் எப்படி என் பாணங்கள் வலுவிழந்தன என கேட்டதற்கு....நாரதர், ராமா!, உன் பாணங்களை விட உன் நாம ஜெபம் சக்தி வாய்ந்தது என்பதை புரிய வைக்கவே இத்தனையும் நடத்தினேன் என்றார்..




Thursday 17 June 2010

தர்ப்பையின் மகிமை...

சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாய் இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. கிரகண காலங்களில் சேமிக்கும் உணவு பதார்த்தங்கள் இருக்கும் பாத்திரங்களில் தர்ப்பை புல்லை போட்டு வைத்தால் அவை பாதிப்படையாமல் இருக்கும் என்பார்கள்.

அரிதான இடங்களில் மட்டுமே வளரும் புல் வகை தாவரமான தர்ப்பையில் பலவகைகள் உண்டு.

தர்ப்பையால் பவித்திரம் ( மோதிரம் போன்ற வளையம் ) செய்து , ஆண்கள் வலது மோதிர விரலிலும், பெண்கள் இடது மோதிர விரலிலும், அணிந்து கொண்டு சங்கல்பம் செய்த பின்னரே எந்த காரியத்தையும் ஆரம்பிப்பார்கள்.

நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து தான் தரப்பை புல் அரிவார்கள். "தீர்த்தத்தின் மறு ரூபமே தர்ப்பை, தீர்த்தம் வேறு தர்ப்பை வேறல்ல" என்கிறது வேதம். இதற்காக ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது,

விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன். தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன். இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான்.

தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வச்சிராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது. வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசுபடுத்த முயன்றான். இத கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புட்களாக மாற்றி விட்டாராம்.

இதனால்தான் தான் தர்ப்பை விசேடமாக திகழ்கிறதாம்....

Monday 14 June 2010

கோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்....


"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"
என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.

கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை "ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்" என்பர்.

இதனையே திருமூலரும்...

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே"


என்று கூறுகிறார்.

எளிமையாய் விளக்குவதானால்

பாதங்கள் - முன்கோபுரம்
முழங்கால் - ஆஸ்தான மண்டபம்
துடை - நிருத்த மண்டபம்.
தொப்புள் - பலி பீடம்
மார்பு - மகாமண்டபம் ( நடராஜர்)
கழுத்து - அர்த்த மண்டபம் (நந்தி)
சிரம் - கர்ப்பகிரகம்
வலது செவி - தக்ஷிணா மூர்த்தி
இடது செவி - சண்டேஸ்வரர்.
வாய் - ஸ்நபன மண்டப வாசல்
மூக்கு - ஸ்நபன மண்டபம்
புருவ மத்தி - லிங்கம்.
தலை உச்சி - விமானம்.

"தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன:
த்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்"
என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்.