Friday 26 August 2011

கந்தசஷ்டி கவசம் உருவான கதை..

கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?

தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.

அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.

தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,

'சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'

என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

இத்த்னை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடதக்கது.

இனி வரும் பதிவுகளில் ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசத்தை வரிசையாக பார்க்கலாம்.


Tuesday 23 August 2011

எது சிறந்த பக்தி?

துரியோதனனுடன் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற, அவர்களைக் கொன்றொழிக்க பல முயற்சிகள் செய்து வந்தான் துரியோதனன். ஆனாலும் பாண்டவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் எல்லாச் சூழ்ச்சியிலும் தப்பி, பத்து வருட வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழச் சென்றார்கள்.

காட்டில் வாழ்ந்து வந்த குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பீமனோ, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபற்றுவதில்லை.

ஒருநாள் "நீ யானைபோல் பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்தார் தருமர். இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான்.

"நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான். அங்கு சென்ற அருச்சுனனும், நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர். மனம் இடிந்தவனாக,அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர்.

வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான். அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார். "இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன்.

"நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவானா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்." என்று உரக்கக் கத்தினான். உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆயிற்று. அவன் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அருச்சனன். தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் பக்தியே தூயதாகவும் தன்னலம் அற்றதாகவும் இருந்தது.