Saturday, 17 September 2011

6. பழமுதிர்ச்சோலைக் கவசம்.


காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவண பவனே சட்கோணத் துள்ளுரை
அரனருள்சு தனே அய்யனே சரணம்
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்

திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்
திகழொளி பவனே சேவற் கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே
சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவண பவனே

குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)
அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டு
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்
தம்பி மா ராகக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா

நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேகம தாக
உமையுடன் வந்தினி துவந்து புரிந்து

அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனே
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித்தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை

வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்
சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவே ரகமுதல்
எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)

இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழநித் தேவ குமாரா
காண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவி
இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
அருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்

தேவராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட
சஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்.

வைரவேல் போற்றி!போற்றி!போற்றி!





5. திருத்தணிக் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமரா குருபரா
வள்ளிதெய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா
அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியநு கூலா
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா
சண்முக நதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா

ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா
ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறுமுகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்
வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணீறணி திருநுதல் அழகும்
கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும்

குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்
காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்
முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட

ஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடி
ஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்
கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தே
ஐயா! குமரா! அப்பனே! என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி
முன்னே கொட்டி முருகா! வருகவென்(று)
அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக

தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவற் கொடியோய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக
அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணப் புண்ணியா வருக
அழகிற் சிவனொளி அய்யனே வருக
களபம் அணியுமென் கந்தனே வருக
மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக

திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக
சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலிற் சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்
அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி

பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திர வாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்
ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமணி அணியுமா பரணமும்
வாயிலநன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோக பந்தியும்

மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்
ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்
அணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்

கருணை பொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்
ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம்
ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்

பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை
இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத்
தானவர் அடியவர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்யச்
சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பயிரவர் ஆனந்த மாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சப்த ரிஷிகள் சாந்தக மென்னச்

சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்
நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லக்ஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய
ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன

ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச்
சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க
குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல்உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேத்த

நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க
மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்
வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர

ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்
சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலற்ற சூலத்தை அறுத்துச் சயித்து
விடவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர்

திருவாவி னன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை
கண்ணிய மாவூற்று கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்
பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந்(து) அடியார்தம்

பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க
கேட்ட வரமும் கிருபைப் படியே
தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!




4. சுவாமிமலைக் கவசம்.



காப்பு.

நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.


ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளி மணாளனே

நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காணநீ வந்து காப்பதும் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைத்தவா போற்றி

திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறுசிரமும் அழகிய முகமும்

ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா

துஷ்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்

தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகக் சகலரும் போற்ற
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வச் சாபம்
குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை

செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரவே சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!!